சாம் கான்ஸ்டாஸ் சதம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 337 ரன்கள்

இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சேம் கான்ஸ்டாஸ் மற்றும் கேம்ப்பெல் கெல்லவே சிறந்த தொடக்கம் அளித்தனர். இருவரும் 37 ஓவர்களில் 198 ரன்கள் சேர்த்தனர். இதில், 97 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த கெல்லவே, குர்னூர் பிரார் பந்தில் விக்கெட் இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி வெறும் 1 ரன்னில் ஹர்ஷ் துபே பந்தில் வெளியேறினார். கான்ஸ்டாஸ் மட்டும் சதம் அடித்து சிறப்பாக விளையாடினார். அவர் 144 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த ஆலிவர் பீக் 2 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கூப்பர் கானொலி 84 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். அவர் கூட ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 73 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 337 ரன்கள் சேர்த்தது. லியாம் ஸ்காட் 47 ரன்களுடன், ஜோஷ் பிலிப் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்தியா ‘ஏ’ அணிக்காக ஹர்ஷ் துபே 3 விக்கெட்கள் எடுத்தார். கலீல் அகமது, குர்னூர் பிரார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Facebook Comments Box