வாழ்நாள் ஃபார்மில் ஃபில் சால்ட் – அயர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்தின் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தெல் தனது டி20 பயணத்தை வெற்றியுடன் தொடங்கினார். டப்ளினில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில், 197 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 18 ஓவரில் அடைந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
டாஸ் வென்ற பெத்தெல், அயர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். அயர்லாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 196 ரன்கள் குவித்தது. ஹாரி டெக்டர் (61*) மற்றும் லோர்க்கன் டக்கர் (55) 68 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்து அயர்லாந்தை வலுவான நிலைக்கு கொண்டுசென்றனர். தொடக்க வீரர்கள் ஸ்டர்லிங் (34) மற்றும் அடைர் (26) 7 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து நல்ல துவக்கம் வைத்தனர். கடைசி பந்தியை டாக்ரெல் சிக்சருக்கு அடித்ததால் இலக்கு 196 ஆக உயர்ந்தது.
ஆனால், இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஃபில் சால்ட் தனது வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் உள்ளார். 46 பந்துகளில் 89 ரன்கள் (10 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து ஆட்ட நாயகன் ஆனார். கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 141 ரன்கள் எடுத்த அவர், மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தன்னுடைய ஆற்றலை நிரூபித்தார்.
சால்ட் – பட்லர் கூட்டணி 28 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து போட்டியை ஆட்ட ஆரம்பத்திலேயே கைப்பற்றியது. பட்லர் 10 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். சால்ட் 20 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்து, தொடர்ந்து அடித்தார். சாம் கரன் (27), கேப்டன் பெத்தெல் (24) ஆகியோரின் பங்களிப்புடன், 18வது ஓவரில் 197/6 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பின் சால்ட் கூறியதாவது: “இந்தப் பிட்சில் விளையாட மகிழ்ச்சியாக இருந்தது. நன்றாக நின்றுவிட்டால் ரன்கள் எடுக்க சுலபம். அதேசமயம், அயர்லாந்து அற்புதமாக ஆடி சவாலான இலக்கை தந்தது” என்றார்.