ரிஷப் பண்ட் இப்போது என்ன செய்கிறார்? அவர் எப்போது திரும்புவார்? – பின்னணி தகவல்கள்
ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்த இந்திய அணியில், ரிஷப் பண்ட் துணை கேப்டனாக பணியாற்றினார். மான்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை தவறாக விளையாடியபோது, அது நேராக இடது காலில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இருப்பினும், பின்னர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தை மிட்விக்கெட்டில் பறக்கவிட்ட சிக்ஸ் இன்னும் ரசிகர்களின் நினைவில் பசுமையாக இருக்கிறது. ரிஷப் பண்ட் இல்லாத டெஸ்ட் அணியை கற்பனை செய்வதே சிரமம். ஒருகாலத்தில் கபில் தேவ் இல்லாத இந்தியா, பின்னர் சச்சின் இல்லாத இந்தியா யோசிக்க முடியாதது போல, இன்று அந்த இடத்தை பண்ட் பிடித்துவிட்டார்.
ஆனால், வரும் அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் மேற்கு இந்தியத் தீவுகள் எதிரான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் பண்ட் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. நாளை (செப்.24) நடைபெறும் அணித்தேர்வில் அஜித் ஆகார்க்கர் தலைமையிலான குழு 15 வீரர்களை அறிவிக்கும் நிலையில், பண்ட் பெயர் அதில் இடம்பெறாது.
தற்போது ரிஷப் பண்ட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஸ்ட்ரெங்க்த் & கண்டிஷனிங் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அனுமதி அளித்த பிறகே அவர் மீண்டும் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கைத் தொடங்குவார். எனவே, அவர் துல்லியமாக எப்போது அணிக்குள் திரும்புவார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கிடையில், துருவ் ஜுரெல் டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இருப்பார்.
மேற்கு இந்தியத் தீவுகள் தொடருக்குப் பின், அக்டோபர் 19 முதல் இந்தியா ஆஸ்திரேலியாவில் வெள்ளைப்பந்து தொடரை ஆடுகிறது. பண்ட் இந்தத் தொடருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் தற்போது வெளிவரும் தகவல். அவர் திரும்பும் காலம் இன்னும் புதிராகவே உள்ளது.
இதற்கிடையில், சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்த தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு அதிகம். நிதிஷ் குமார் ரெட்டிக்கும் தேர்வு சாத்தியம் இருக்கிறது. எனினும், பண்ட் இல்லாத சூழலில் சர்பராஸ் தான் சரியான மாற்றாக இருப்பார் என்றாலும், பிசிசிஐ ஸ்ரேயஸ் ஐயரையே முன்னிலைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.