1983 உலகக் கோப்பை ஃபைனலில் கள நடுவராக இருந்த டிக்கி பேர்ட் மறைவு!

1983 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கள நடுவராக செயல்பட்ட டிக்கி பேர்ட் காலமானார். அவருக்கு வயது 92.

1933-ல் இங்கிலாந்தின் யார்க்‌ஷையரில் பிறந்த பேர்ட், முதலில் யார்க்‌ஷையர் மற்றும் லெஷ்டர்ஷையர் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடினார். முதல் தர போட்டிகளில் 93 ஆட்டங்களில் கலந்து கொண்டு 3,314 ரன்கள் எடுத்தார். ஆனால் முழங்கால் காயம் காரணமாக விளையாட்டை தொடர முடியவில்லை.

பின்னர் 1970களில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளில் சர்வதேச மட்டத்திலும் நடுவராக பணியாற்றினார். மொத்தம் 66 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர். குறிப்பாக 1983-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் போட்டியில் நடுவராக இருந்தார். அப்போது இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.

1996-ல் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிதான் அவருடைய கடைசி சர்வதேச ஆட்டம். அதன் பின் சில ஆண்டுகள் கவுன்ட்டி கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றினார்.

செவ்வாய்க்கிழமை அவர் காலமானதை யார்க்‌ஷையர் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் உறுதி செய்துள்ளது.

Facebook Comments Box