அன்று சச்சினிடம் ஆட்டமிழந்த திராவிட்… இன்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஆட்டமிழந்த சமித் திராவிட்!
பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை ஆட்டமிழக்கச் செய்தது ராகுல் திராவிட்டை சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய அரிதான நிகழ்வொன்றை நினைவூட்டுவதாக அமைந்தது.
டெண்டுல்கர் ஜூனியருக்கும் திராவிட் ஜூனியருக்கும் இடையிலான ஆட்டம் 3 பந்துகளே தாங்கின என்றாலும் சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் பெரிய பேசுபொருளானது. கர்நாடகாவின் வளரும் நட்சத்திரம், சமித் திராவிட் முதலில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3வது பந்தில் அர்ஜுன் டெண்டுல்கர், சமித் திராவிட்டை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்.
வாரிசுகள் இருவரும் இந்திய அணிக்கு ஆடும் அதிசயம் நிகழுமா என்று தெரியவில்லை, ஆனால் தந்தைமார்கள் இருவரும் இந்திய அணியின் தூண்களாகத் திகழ்ந்தது நாம் அறிந்ததே, ராகுல் திராவிட்டும் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து 11,037 ரன்களை 47.98 என்ற சராசரியில் 31 சதக்கூட்டணியுடன் சேர்ந்து எடுத்துள்ளனர் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று இப்போது கூட்டணிக்குத் திணறும் உலக அணிகளை நினைக்கும் போது பெருமை தருவதாக உள்ளது.
நேற்று எப்படி அர்ஜுன் டெண்டுல்கர் சமித் திராவிட்டை வீழ்த்தினாரோ அதே போல் ஐபிஎல்-ற்கு முந்தைய நாட்களில் இருவரது கரியரின் ஆரம்பக் காலக்கட்டங்களில் ஒரு அரிய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ராகுல் திராவிட்டை கிளீன் பவுல்டு செய்துள்ளார்.
என்.கே.பி. சால்வே சாலஞ்சர் டிராபி ஒருநாள் போட்டிகள் 2003-ல் நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போது இந்தியா பி அணியின் கேப்டனாக ராகுல் திராவிட் திகழ்ந்தார். இந்தியா ஏ அணியின் தலைவர் அனில் கும்ப்ளே. சச்சின் டெண்டுல்கர் இந்தியா ஏ அணிக்காக அருமையான 88 ரன்களை எடுக்க இந்தியா ஏ அணி 315 ரன்கள் என்ற கடினமான இலக்கை ராகுல் திராவிட் அணிக்கு நிர்ணயித்தது.
சேசிங்கில் திராவிட் அணி 3 விக்கெட்டுகளை விரைவு கதியில் இழக்க திராவிட்டுடன் களத்தில் யுவராஜ் சிங் இணைந்தார். அப்போது சச்சின் டெண்டுல்கர் பந்து வீச வந்த போது ராகுல் திராவிட் 27 ரன்களில் சச்சின் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். அதன் பிறகு இந்தியா பி என்னும் ராகுல் திராவிட் அணி கடும் சரிவைச் சந்தித்து 215 ரன்களுக்குச் சுருண்டது.
சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் விருதை தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமுடன் பகிர்ந்து கொண்டார். அன்று தந்தை தந்தையை வீழ்த்த இன்று மகன் மகனை வீழ்த்தினார் என்று சமூக ஊடகங்களில் இது பேசுபொருளானது.