ஆசிய கோப்பை | இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்திய அணி

ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ கட்டப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இந்த தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. அதே சமயம், திட்டமிட்டபடி இன்று துபாயில் இந்தியா – இலங்கை ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா சார்பில் அபிஷேக் சர்மா – ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கில் 4 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி, 31 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர், இலங்கை கேப்டன் அசலங்கா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து திலக் வர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி 66 ரன்கள் குவித்தது. சஞ்சு, 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன்களும், அக்சர் படேல் 15 பந்துகளில் 21 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா 202 ரன்களில் தன்னுடைய இன்னிங்ஸை முடித்தது.

இதனால் இலங்கைக்கு வெற்றி பெற 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 200+ ஸ்கோர் எட்டிய முதல் அணி இந்தியாவாகும். இப்போட்டியில் பும்ரா, துபே ஆடவில்லை; அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா களமிறங்கியுள்ளனர்.

Facebook Comments Box