சூப்பர் ஓவரில் ஷனகாவுக்கு ரன் அவுட் வழங்காதது ஏன்? – கேள்விகளும் விளக்கமும்!

நடந்து வரும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா–இலங்கை போட்டி சுவாரஸ்யமாக சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அங்கு அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்று, தோல்வியறியாத அணியாக பாகிஸ்தானை எதிர்த்து இறுதிக்கு முன்னேறியது.

துபாயில் வெள்ளிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் பலர் இடையே விவாதமாக இருந்த விஷயம் – சூப்பர் ஓவரில் ஷனகா ரன் அவுட் ஆனதைப் போல இருந்தும் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பதுதான்.

சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை துடுப்பெடுத்தது. ஆனால் ஏன் பதும் நிசங்காவை அனுப்பாமல் வைத்தார்கள் என்பது புதிர். ஷனகா நான்காவது பந்தில் சஞ்சு சாம்சனின் த்ரோவுக்கு தெளிவாக ரன் அவுட் ஆனார். அர்ஷ்தீப் வீசிய யார்க்கர் பந்தை ஷனகா தவற விட்டதால் க்ரீஸை விட்டு வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஸ்டம்பை அடித்து ரன் அவுட் செய்தார். ஆனால் அதே நேரத்தில் அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்தார். இங்கு குழப்பம் ஏற்பட்டது. உண்மையில் ரன் அவுட் தெளிவாக இருந்தும், ஏன் அம்பயர் கொடுக்கவில்லை என்பது சந்தேகமாக இருந்தது.

களநடுவர், விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார் என்ற அடிப்படையில் அவுட் அறிவித்தார். இதற்குச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். ஷனகா உடனே மூன்றாம் நடுவரிடம் ரிவியூ கேட்டார். ரீப்ளேயில் பார்த்தபோது பந்துக்கும் மட்டைக்கும் தொடர்பு இல்லையென தெளிவானது.

அதனால் ஷனகா கேட்ச் அவுட் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் க்ரீஸை விட்டு வெளியே வந்தபோது சஞ்சு சாம்சன் ஸ்டம்பை அடித்தது ரன் அவுட் தானே என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் நடுவர் ரன் அவுட் இல்லை என்றே தீர்ப்பு கூறினார். இதுவே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

முக்கிய பிரச்சினை – சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்த பிறகு அர்ஷ்தீப்பின் கேட்ச் அப்பீலுக்கு நடுவர் தாமதமாக அவுட் கொடுத்ததுதான். MCC விதி படி, “அவுட் என அறிவிக்கப்பட்டவுடன் அந்தப் பந்து டெட் ஆகிவிடும்.” இங்கு விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக அப்பீல் வந்ததால், நடுவர் அதையே ஏற்றுக் கொண்டார்.

அப்படியிருக்கையில், சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்யும் போது பந்து ஏற்கனவே டெட் பந்து ஆகிவிட்டது. பந்தில் மட்டைக்கு தொட்டுக்கொள்ளவில்லை, கேட்ச் தவறான தீர்ப்பு தான். ஆனால் ஒருமுறை டெட் பந்து ஆன பிறகு அதை மாற்ற முடியாது. எனவே ரன் அவுட் வழங்கப்படவில்லை.

சனத் ஜெயசூர்யா விளக்கமாக கூறியதாவது: “காட் பிஹைண்டுக்கு மைதான நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். அதன் பின் ஷனகா ரிவியூ செய்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் ஒரே பந்துக்கு இரண்டு வித அவுட் கொடுக்க முடியாது என்பதே விதிமுறை” என்றார்.

இறுதியில் ஷனகா அடுத்த அர்ஷ்தீப் பந்திலேயே டீப் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். இலங்கை தோல்வியடைந்தது.

Facebook Comments Box