166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்

இந்திய லெக்-ஸ்பின்னர் ராகுல் சஹார், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக அறிமுகமான போட்டியிலேயே 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 1859-ஆம் ஆண்டிலிருந்து நீடித்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிராக சஹார் 24 ஓவர்களில் 7 மெய்டன்களுடன் 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 1859-ல் சர்ரே அணிக்காக வில்லியம் மியூடில் எடுத்து வைத்திருந்த 7 விக்கெட்–61 ரன் சாதனையை மீறினார்.

மேலும், இந்தப் போட்டியில் மொத்தம் 118 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்தார். இதுவே அவரின் முதல் தர கிரிக்கெட்டிலும், நான்கு நாள் வடிவிலும் சிறந்த பந்து வீச்சாகும்.

ஹாம்ப்ஷயர் அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள் மட்டுமே இருந்தது. ஒருபோதில் 1 விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்திருந்தும், ராகுல் சஹாரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்த 95 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களுக்கு சரணடைந்தது.

விசேஷமாக, இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரையும் இரு இன்னிங்ஸ்களிலும் வெளியேற்றினார். சுந்தர் 56 மற்றும் 11 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் பெற்றார்.

சர்ரே அணியின் வில் ஜாக்ஸ், கேம் ஸ்டீல் ஆகியோர் காயமடைந்ததால் ராகுல் சஹாரை அணி இணைத்தது. தற்போது அவர் ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சியில் விளையாடி வருகிறார்.

Facebook Comments Box