பவுலிங்கில் ‘ரன் மெஷின்’ ஹாரிஸ் ராவுஃப் – வாசிம் அக்ரம் கிண்டல்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 3.4 ஓவர்களில் 50 ரன்கள் களையளித்தார். குறிப்பாக ஒரே ஓவரில் 17 ரன்களை வழங்கியதே, இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை சாதகமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சு நாயகன் வாசிம் அக்ரம், “பேட்டிங்கில் ரன் மெஷின் இருக்கிறான். ஆனால் பவுலிங்கில் ரன் மெஷின் ஹாரிஸ் ராவுஃப்தான்” என்று கிண்டலாகச் சாடினார்.

வாசிம் அக்ரம் கூறியதாவது:

“ஹாரிஸ் ராவுஃப் துரதிர்ஷ்டவசமாக பவுலராக ரன் மெஷின்… குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. நான் தனிப்பட்ட முறையில் அவரை கிண்டல் செய்யவில்லை. ஆனால் முழு நாடும் அவரை விமர்சிக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் அவர் ஒருபோதும் முன்னேற முடியாது. சிகப்புப் பந்தில் ஆட மறுக்கும் வீரர், அணிக்கு தேவையில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும் – ‘ரெட் பால் கிரிக்கெட் விளையாட மாட்டீர்களா? அப்போ நன்றி, வெளியேறுங்கள்’ என்று.

குறைந்தது 4–5 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலாவது விளையாட வேண்டும். அப்போதுதான் உங்கள் லெங்க்த் மேம்படும். ராவுஃப்பின் ரன் அப் கூட சரியாக இல்லை. கடந்த 4–5 ஆண்டுகளாக அவர் ஏன் இதைச் சரிசெய்யவில்லை என்று நான் வக்கார் யூனிஸிடம் கேட்டேன். அதற்கும் காரணம் ரெட் பால் கிரிக்கெட் விளையாடாததுதான் என்று அவர் சொன்னார்.

இந்தியா 7க்கு 7 வெற்றியுடன் சிறப்பாக முடித்துள்ளது. இந்திய அணிதான் தகுதியான சாம்பியன். அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்,” என்றார் வாசிம் அக்ரம்.

Facebook Comments Box