“ஆசியக் கோப்பையை சூர்யகுமார் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்” – மோசின் நக்வி

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் கோப்பை இந்திய அணிக்கு வழங்கப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேரில் வந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார் என்று பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. போட்டிக்குப் பிறகு கோப்பையை வழங்கும் பொறுப்பு மோசின் நக்விக்கே இருந்தது. ஆனால் இந்திய அணி அவரிடமிருந்து கோப்பையை ஏற்க மறுத்ததால், அதிகாரி ஒருவர் அதை எடுத்துச் சென்றார். இதுவே பெரும் விவாதமாக மாறியது.

இதனால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியை கொண்டாடியது. பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, “மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என முன்கூட்டியே முடிவு செய்தோம். அது அவரே எடுத்துக் கொள்ளட்டும் என்பதல்ல. விரைவில் கோப்பையும் பதக்கங்களும் இந்திய அணியிடம் சேர்க்கப்படும் என்று நம்புகிறோம். நவம்பர் மாதம் துபாயில் நடைபெறும் ஐசிசி மாநாட்டில், மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்றார்.

இதற்கிடையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, கோப்பை இந்திய அணிக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த மோசின் நக்வி, “இந்த கூட்டம் அதற்கானது அல்ல. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கோப்பை வேண்டுமானால், ACC அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என கூறியதாக பாகிஸ்தான் ஊடகம் ஜியோ சூப்பர் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box