இந்திய ஆடவர் அணியைப் போலவே, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்திய மகளிர் அணி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மாட்டார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பை தொடரில் மூன்று முறை இந்தியா – பாகிஸ்தான் ஆடவர் அணிகள் நேருக்கு நேர் மோதின. அந்த மூன்றுப் போட்டியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்ததால், சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு அந்தத் தொடரில் கோப்பை வழங்கப்படவில்லை.
இதே சூழலில் இப்போது மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியிலும் கைகுலுக்கல் இருக்காது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி விதிகளில் வீராங்கனைகள் கட்டாயம் கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் இந்த முடிவுக்குக் காரணம், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவமே என்று கூறப்படுகிறது. கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான இடங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.