‘இந்தியா நம்பர் 1 அணி தான்; ஆனால் நடத்தை மூன்றாம் தரம்’ – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி

ஆசியக் கோப்பை வெற்றிக் கோப்பையை மோசின் நக்வியிடமிருந்து பெற இந்திய அணி மறுத்திருப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி விமர்சனம் செய்துள்ளார்.

“இந்திய அணி உலகின் நம்பர் 1 அணி என்பது உண்மை. ஆனால், அவர்களின் நடத்தை மூன்றாம் தரமாக உள்ளது. கோப்பையை வழங்குவது மோசின் நக்வியின் பொறுப்பு. அவர் வழங்கும் கோப்பையை ஏற்க மறுத்தால், அதுவே அவர்களுக்கு அவமானம். நீங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளீர்கள். அப்படியிருக்க, ஏன் இந்த பிடிவாதம்? மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர். இதே நிலைமையில், ஐசிசி தொடரில் ஜெய் ஷா கோப்பை வழங்கினால் பாகிஸ்தான் அணி அதை பெற மறுக்கும் நிலை வந்தால் யாரை குற்றம் சொல்வீர்கள்?” என பாசித் அலி கேள்வி எழுப்பினார்.


ஆசிய கோப்பை சர்ச்சை பின்னணி

செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. போட்டிக்குப் பிறகு, கோப்பையை வழங்க பாகிஸ்தான் அமைச்சர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வி வந்தார். ஆனால், இந்திய அணி அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது.

இதையடுத்து, நக்வியின் அறிவுறுத்தலின்படி, அதிகாரி ஒருவரால் கோப்பை எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய அணி கோப்பையில்லாமல் வெற்றியை கொண்டாடியது.

பின்னர், பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா விளக்கமளித்து, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர் என்பதால், அவரிடமிருந்து வாங்க இயலாது. ஆனால், அதனால் கோப்பையை அவர் வைத்துக் கொள்ளட்டும் என்பதல்ல. விரைவில் கோப்பையும் பதக்கங்களும் இந்திய அணியிடம் சேர்க்கப்படும். மேலும், நவம்பரில் துபாயில் நடைபெறும் ஐசிசி மாநாட்டில் மோசின் நக்விக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம்” என்றார்.

இந்த சூழலில், “இந்திய அணி கோப்பை வேண்டுமானால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் நேரில் வந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றுக்கொள்ளலாம்” என மோசின் நக்வி தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box