பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை: அங்குஷிதா, அருந்ததி சாம்பியன்
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. மகளிர் 60–65 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் அசாமைச் சேர்ந்த அங்குஷிதா போரோ, ராஜஸ்தானைச் சேர்ந்த பர்தவி கிரேவாவை 3–2 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
65–70 கிலோ எடை பிரிவு இறுதியில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த அருந்ததி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்நேகாவை 5–0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 57–60 கிலோ எடை பிரிவில் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கவாளி பர்வீன் ஹூடா (சாய்), ஹரியானாவைச் சேர்ந்த பிரியாவை 3–2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
45–48 கிலோ எடை பிரிவில் உத்தரகாண்டின் நிவேதிதா கார்கி, உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கவாளி மஞ்சு ராணியை (ரயில்வேஸ்) 3–2 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 48–51 கிலோ எடை பிரிவில் ரயில்வேஸ் அணியைச் சேர்ந்த பாவ்னா சர்மா, சவிதா (ரயில்வேஸ்) 5–0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
51–54 கிலோ எடை பிரிவில் மகாராஷ்டிராவின் குஷி யாதவ், திவ்யா பவாரையை (ஏஐபி) 3–2 என்ற கணக்கில் வென்றார். 54–57 கிலோ எடை பிரிவில் இமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த வினாக்சி, முஷ்கானையை (ஏஐபி) 5–0 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
70–75 கிலோ எடை பிரிவில் மோனிகா (சாய்), ஹரியானாவின் நிஷுவையை 4–1 என்ற கணக்கில், 75–80 கிலோ எடை பிரிவில் பபிதா பிஷ்த், பஞ்சாபின் கோமலையை 3–2 என்ற கணக்கில், 80+ கிலோ எடை பிரிவில் ரிகிதா, ஷிவானியையை (ஏஐபி) 5–0 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஹஷ்முதின் அசத்தல்: ஆண்கள் 47–50 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் விஷ்வநாத் (சர்வீசஸ்), கோபி மிஸ்ராவை (சர்வீசஸ்) 5–0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 50–55 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற அமித் பங்கால் (சர்வீசஸ்) 1–4 என்ற கணக்கில் ஆஷிஷிடம் தோல்வி அடைந்தார். 55–60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் சர்வீசஸ் அணியின் முகமது ஹஷ்முதின், ரயில்வேஸின் மிதேஷ் தேஷ்வாலை 5–0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு செல்லினார்.