ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: கெர்ரி பேக்கர் காரணமான மாற்றம்

கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களில் வீரர்கள் வெள்ளை நிற உடைகளில் மட்டுமே விளையாடினர். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளை அணிகின்றனர். இந்த மாற்றத்திற்கு பின்னால் பெரிய கதை மற்றும் போராட்டம் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி (டி.வி) கருப்பு வெள்ளையிலிருந்து வண்ண நிறத்திற்கு மாறியது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் மீடியா நிறுவனராக இருந்த கெர்ரி பேக்கர் சேனல் 9-ஐ நடத்தி வந்தார்.

அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அணுகி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் கோரினார். வழக்கமான தொகையைவிட எட்டு மடங்கு அதிகம் வழங்குவதாக கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமத்தை வழங்க மறுத்தது. ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே அரசு நடத்தும் ஏபிசி சேனலுக்கு 20 ஆண்டுகள் அடிப்படையில் உரிமம் வழங்கி வைத்திருந்தனர்.

தனியாருக்கு உரிமை கொடுத்தால் அவர்கள் வியாபார ரீதியாக மட்டுமே செயல்படுவார்கள், இது கிரிக்கெட்டின் மதிப்பிற்கு களங்கம் சேர்க்கும் என்று வாரியம் கருதியது. இதனால் அதிருப்தியான கெர்ரி பேக்கர், 1977-ல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக ‘வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்’ தொடர் நடத்தினார்.

அதில் விளையாடும் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கி ஒப்பந்தம் செய்தார். அதிக தொகை வழங்கப்பட்டதால், ஆஸ்திரேலிய வீரர்களுடன் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்களும் தொடரில் பங்கேற்றனர். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி ஏற்பட்டது.

வேர்ல்டு சீரிஸ் தொடரை நிறுத்த ஐசிசி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. “இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் ஐசிசி தொடர்களில் விளையாட முடியாது, முதல்தர போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை” என மிரட்டியது. இதனை எதிர்த்து கெர்ரி பேக்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும், அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நலனுக்காகவே வேர்ல்டு சீரிஸ் தொடர் நடத்தப்படுகிறது” என வாதம் முன்வைத்தார்.

நீதிமன்றம், “வீரர்களுக்கு தொடரில் பங்கேற்பதில் தடையிடக் கூடாது” என உத்தரவிட்டது. ஆனால் ஐசிசி இதை எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. மைதானங்களை வழங்கக் கூடாது என அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் மறைமுகமாக உத்தரவிட்டது. ஆனால் கெர்ரி பேக்கர், இரண்டு கால்பந்து மைதானங்களை குத்தகைக்கு எடுத்து போட்டிகளை நடத்தியார்.

அந்த மைதானத்தில் வெளியே தயாரிக்கப்பட்ட பிச்சைப் பயன்படுத்தினர். இந்த வகை ஆடுகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது கெர்ரி பேக்கர் தான். டி.வி.யில் பிரத்யேக நேரத்தில் போட்டிகளை ஒளிபரப்பினார். வெள்ளை பந்தையும் பயன்படுத்தினார். பல அணிகள் விளையாடுவதால் வித்தியாசம் புரிய, வெள்ளை சீருடைகளை வணிக ரீதியிலும் வண்ண சீருடைகளில் மாற்றினார். கால் காப்பு, கையுறைகளும் வண்ணங்களில் மாறின.

போட்டிகளை சிறப்பாக ஒளிபரப்ப 6 கேமராக்களை மைதானம் சுற்றிலும் அமைத்தார். இதனால் போட்டிகள் பார்ப்பதற்கு புதிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது. ரசிகர்கள் ஆதரவு பெருகி, மைதானத்திற்கு பெரிய கூட்டம் வந்து, டி.வி. ரேட்டிங் உயர்ந்தது. ஆனால், பெரிய செலவு காரணமாக எதிர்பார்த்த வருமானம் ஈட்டப்படவில்லை.

இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நஷ்டம் அடைந்தது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்து, ஒளிபரப்பு உரிமை வழங்க ஒப்பந்தம் செய்தனர். கெர்ரி பேக்கர், வேர்ல்டு சீரிஸ் தொடரால் மேலும் நஷ்டம் அடைவதைத் தவிர்க்க தொடர் கைவிட்டார்.

அதேநேரத்தில், அவர் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தார். தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமானதாக, பெரிய வருமானம் மற்றும் வீரர்களுக்கு சம்பளம் கிடைக்கும் முறையில் மாறியுள்ளது. கெர்ரி பேக்கர் அறிமுகப்படுத்திய மாற்றங்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் டெஸ்ட் போட்டிகள் இன்னும் பாரம்பரியமாக வெள்ளை சீருடையில் நடத்தப்படுகிறது.

Facebook Comments Box