மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதல்

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஏற்கனவே இரண்டு லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் திறமையான தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதுவும் வராத நிலையில், இன்றைய ஆட்டத்தில் இருவரிடமிருந்தும் சிறப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா ஆகியோரும் இன்று மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் இழந்து 124 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் என்ற நிலைகளில் இருந்தபோதும், நடுவரிசை வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.

மறுபுறம், தென் ஆப்பிரிக்க அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியும், மற்றொன்றில் வெற்றியும் பெற்று களமிறங்குகிறது. அவர்களின் அணியில் டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், லாரா வோல்வார்ட், மரிஜான் காப், அன்னேக்கே போஷ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்க, நோன்கு லாபா, அயபோங்கா காகா, மரிஜான் காப், மசபாட்டா கிளாக், குளோ டைரன் ஆகியோர் பந்துவீச்சில் தங்கள் தாக்கத்தை செலுத்த உள்ளனர்.

இன்றைய ஆட்டத்துக்கான தயாரிப்பில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டார்.

Facebook Comments Box