ஆஷஸ் தொடருக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி: கம்மின்ஸ் பங்கேற்பு சந்தேகம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் முன்னணி வேகப்பந்துவீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் போட்டியிலும், முழு தொடரிலும் விளையாட முடியாது என்ற சந்தேகம் நிலவுகிறது. முதுகு காயம் இன்னும் முழுமையாக ஆறாததால் அவர் ஆட்டத்திற்குத் தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை தகவலின்படி, கடந்த வாரம் கம்மின்ஸ் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது முதுகு பகுதியில் இன்னும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பந்து வீச்சு பயிற்சிக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை தொடரில் கம்மின்ஸ் இல்லாதபோது ஸ்மித் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியிருந்தார். ஸ்மித் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 23 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

மேலும், கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் இணைந்து போலண்ட் பந்து வீச்சை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலண்ட், 2021ஆம் ஆண்டு மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி ரசிகர்களை அசத்தியிருந்தார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Facebook Comments Box