ஜெய்ஸ்வால் ரன் அவுட்: இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் இரட்டை சதம் எட்டும் வாய்ப்பு அவரிடமிருந்து பறிபோனது.
இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது டெஸ்ட் டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 318 ரன்கள் எடுத்தது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், ரசிகர்கள் ஜெய்ஸ்வாலிடம் இரட்டை சதத்திற்கான எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அந்த கனவு நிறைவேறவில்லை. ஜேடன் சீல்ஸ் வீசிய ஓவரில் ஜெய்ஸ்வால் மிட்-ஆஃப் திசையில் பந்தை அடித்து சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால் கேப்டன் ஷுப்மன் கில் ஓட்டம் எடுக்கவில்லை. அதற்குள் பாதியிலிருந்த ஜெய்ஸ்வால் திரும்பி ஓடியும், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் துல்லியமாக ஸ்டம்பை தாக்கியதால் ரன் அவுட் ஆனார்.
‘நான் தானே அழைத்தேன்’ என கில்லிடம் தெரிவித்த ஜெய்ஸ்வால், நடுவர் தீர்ப்பின் பேரில் பவிலியனுக்கு திரும்பினார். இதனால் 200 ரன்களை எட்டும் வாய்ப்பை இழந்தார்.
இதற்கிடையில், இந்திய கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். ஜூரெல் 44 ரன்களில் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.