தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறைபாடுகள், ஊழல் விவகாரங்களை மறைப்பதற்காக திமுக அரசு கூட்டம் நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “தமிழகத்தில் நிர்வாக துறைகள் பல்வேறு பிரச்சினைகளால் துவண்டு கிடக்கின்றன. ஆனால், தற்போதைய திமுக அரசு, அவற்றுக்கு தீர்வு காணாமல், தனது அரசியல் நோக்கத்திற்காகவே கூட்டங்களை நடத்துகிறது. இந்த போராட்டத்தின் மூலம், முதலமைச்சரின் செயல்பாடுகளை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கிறோம்” என்று பேசினார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலை, நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என அவர் விமர்சித்தார். “அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்த திமுக அரசு, மக்களின் கவனத்தை திருப்பும் வகையில் செயல்படுகிறது. தமிழக மக்களின் நலனை பாதுகாக்கும் ஒரே அரசியல் இயக்கம், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தான். அதனால்தான் இந்த கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது” என்று தமிழிசை கூறினார்.

அதேநேரத்தில், தொகுதி மறு வரையறை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது” என்று தெளிவாக அறிவித்துள்ளதை தமிழிசை நினைவுபடுத்தினார். ஆனால், திமுக அரசு, மக்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கி, தனது நிர்வாக தோல்விகளை மறைக்க முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழக மக்களுக்கு மிக முக்கியமான காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு போன்ற நெருக்கடியான விஷயங்களில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்பதையும் தமிழிசை சுட்டிக்காட்டினார். “இந்த முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எந்த ஒரு முக்கிய கூட்டத்தையும் திமுக அரசு நடத்தியதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“தமிழக மக்களின் உரிமைகள், நலன்கள், வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கும் இயக்கம், வெறும் அரசியல் பேரங்கள் நடத்தும் திமுக அரசு அல்ல, மாறாக தேசபற்று கொண்ட அரசியல் இயக்கங்களே தமிழர்களின் உரிமைகளை காப்பாற்றும்” என்று தமிழிசை கூறினார்.

[youtube https://www.youtube.com/watch?v=2u2Tz57pDtY&w=711&h=400]
Facebook Comments Box