தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படும்,
எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்று பெற்றோர், மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, யூனிட் தேர்வுகள் என எதுவும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்காகப் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை செயலாளர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பிரதிநிதி ஆகியோரை வைத்து ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் விரைவில் தொடங்கும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்குகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுப்போம். குறிப்பாக மாணவர்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம். அவர் இதுகுறித்த முடிவை விரைவில் அறிவிப்பார். ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை முன்வைக்கும்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறும், பாடப்புத்தகங்களை எப்படி விநியோகிக்கப் போகிறோம், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை எப்படி முறைப்படுத்தப் போகிறோம் என்பது குறித்த ஆலோசனைகளையும் முதல்வரிடம் குறிப்பிட்டுள்ளோம்.
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்தபோது எதிர்க்கட்சியாக இருந்தபோதே தொடர்ந்து எதிர்த்து வந்தோம். நீட்டை எதிர்த்துச் சட்டப்பேரவையில் குரல் கொடுத்திருக்கிறோம். இம்முறை சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்துக்குள் கூடாது என்று தெரிவித்துள்ளோம். அதை வலியுறுத்திதான் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு மட்டுமல்ல, எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் அதையெல்லாம் ரத்து செய்ய வேண்டும்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post