மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்  குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, தென்னை, பனை மரங்களில் கல் கட்டுவது, போன்ற சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்  குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு (33) அச்சக தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் லோடுமேன் செல்வம் (36), வீராசாமி (52), சரத்குமார் (28) உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சற்று நேரத்தில் பிரபு, செல்வம் ஆகியோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி போலீஸாரின் கெடுபிடியையும் மீறி ஆங்காங்கே ஊறல் மற்றும் எரிசாராயம் தயாரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box