இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் மனு : அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவில், அமெரிக்கா சென்று இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மனுவில் அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி, அசோக் குமார் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, அசோக் குமார் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலனை செய்தது. அதற்கமைவாக, அந்த மனுவிற்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு அளித்து, வழக்கை ஜூன் 30 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Facebook Comments Box