தவெகக் கொடி தொடர்பான வழக்கு – தலைவர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு என மூவர்ணம் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனர் பச்சையப்பன் என்பவர் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், சிகப்பு–மஞ்சள்–சிகப்பு நிறங்களில் அமைந்த கொடி, அவரது அமைப்பின் அடையாளமாக உருவாக்கப்பட்டதாகவும், இது கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பதிவுத்துறையின் மூலம் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைப்புக்கே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்தும் தனிப்பட்ட உரிமை உள்ளதாகவும், வேறு யாரும் – அதுவும் அதே நிறங்களை கொண்ட கொடியை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தலைமையிலுள்ள தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கிய கொடியைத் தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி,

“வர்த்தக முத்திரை என்பது பொதுவாக பொருட்களுக்கு உரியதுதானே? அரசியல் கட்சியின் கொடிக்கு எப்படி இது பொருந்தும்?” என சந்தேகம் எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர்,

“வர்த்தக முத்திரை என்பது பொருட்களுக்கே மட்டும் அல்ல, சேவைகளுக்கும் பொருந்தும். நன்கொடை அமைப்புகள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைவகை நிறுவனங்களும் இதற்குள் அடங்கும்,” என விளக்கமளித்தார்.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் இரண்டு வாரங்கள் காலக்கெடுவுக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments Box