செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம்: செயலியின் மூலம் கண்காணிக்க திட்டமிடும் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி, நகரில் உள்ள செல்ல நாய்கள் மற்றும் தெரு நாய்கள் பற்றிய தகவல்களை முன்னேற்றமான முறையில் நிர்வகிக்க, மைக்ரோசிப் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மேற்பார்வை மற்றும் நிர்வாகத்துக்காக ஸ்மார்ட்போன் செயலி ஒன்றையும் உருவாக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
வெறிநாய் கடி, தொற்று நோய் பரவல், தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஐந்து பகுதிகளில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்குகின்றன. இவற்றுடன், நுங்கம்பாக்கத்தில் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையமும் செயல்படுகிறது.
மேலும் 10 மண்டலங்களில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், ரேபிஸ் தடுப்பூசியும் வழங்கும் வகையில் புதிய மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில், சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
மாநகராட்சி, தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் சேர்த்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு, அவற்றின் முழுமையான தகவல்களுடன் மைக்ரோசிப் பொருத்தும் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதில் நாய்களைப் பற்றிய விவரங்கள் – பிடிக்கப்பட்ட இடம், கருத்தடை சிகிச்சை தேதி, அன்டி ரேபிஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சை தகவல்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும்.
செல்ல நாய்களின் உரிமையாளர்களின் பெயர், உரிமம் தொடர்பான தகவல்கள், தடுப்பூசி போட்ட கால்நடை மருத்துவரின் விபரங்கள் போன்றவை அனைத்தும் மைக்ரோசிப் மூலமாக இணையவழி பதிவு செய்யப்படும்.
இந்த முழு செயல்முறையை தரமான முறையில் கண்காணிக்க, மாநகராட்சி ஒரு ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்குவதற்கான டெண்டர் (ஏலக்கோரிக்கை) வெளியிட்டு உள்ளது. இந்த செயலி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேதியை நினைவூட்டும் அலர்ட் உரிமையாளரின் மொபைலில் அனுப்பும் வசதியையும் கொண்டிருக்கும்.
இத்திட்டம், மாநகராட்சியின் வளர்ந்துவரும் டிஜிட்டல் நிர்வாகக் கொள்கையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.