கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் புதிய முன்மாதிரி – இரு நோயாளிகளுக்குப் பரஸ்பரமாக பொருத்தப்பட்ட தான கொடுக்கப்பட்ட கல்லீரல்கள்

Daily Publish Whatsapp Channel

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் புதிய முன்மாதிரி – இரு நோயாளிகளுக்குப் பரஸ்பரமாக பொருத்தப்பட்ட தான கொடுக்கப்பட்ட கல்லீரல்கள்

கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைகளில் கல்லீரல் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு ஆண்கள், அவர்களது மனைவிகளால் தானமாக வழங்கப்பட்ட கல்லீரல்களை பரஸ்பர முறையில் மாற்றி பொருத்திக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் மூலம் உயிர் வாழும் வாய்ப்பு பெற்றனர். இது தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட சிகிச்சையாகும்.

இச்சிகிச்சை தொடர்பாக, ஜெம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் ஆகியோர் சென்னை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர் ஜெம் மருத்துவமனையில், நாள்பட்ட கல்லீரல் செயலிழப்பு (சிரோசிஸ்) காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்தார். அதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிக்குச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர், இதேபோன்ற கல்லீரல் செயலிழப்பு காரணமாக ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த இருவருக்கும் வாழ்க்கையை நீட்டிக்கும் ஒரே வழி கல்லீரல் மாற்று சிகிச்சையாகும். அவர்களது மனைவிகள் தங்களது கணவர்களுக்கு தானமாகக் கல்லீரல் அளிக்க முன்வந்தனர். இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளில் அந்த மனைவிகளின் கல்லீரல்கள் நேரடியாக அவர்களது கணவர்களுக்கு பொருந்தாதவையாக இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில், ஒருவரது மனைவியின் கல்லீரல் மற்றொரு நோயாளிக்கு ஏற்றதாகவும், அதேபோல, இரண்டாவது நோயாளியின் மனைவியின் கல்லீரல் முதலாவவருக்கு பொருந்தக்கூடியதாகவும் கண்டறியப்பட்டது.

இது பரஸ்பர (Swap Transplant) முறையில் மாற்று அறுவைசிகிச்சை செய்யும் வாய்ப்பை உருவாக்கியது. ஆனால், அரசு விதிமுறைகள் படி, இது ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்குள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. இரண்டு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், தான ஒப்புதல் குழுவிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இந்தத் தடையை கடந்துவர, மருத்துவமனை நிர்வாகங்கள் தமிழக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னர், இரு நோயாளிகளுக்கும் தனித்தனியாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.

இந்த சிகிச்சை முழுவதும், தமிழக முதல்வர் நலவாழ்வு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஒரு முன்னோடி நடைமுறையாக கருதப்படுகிறது. மேலும், இவ்வகையான பரஸ்பர தானம் மூலம் நடத்தப்படும் சிகிச்சைகளுக்கான நடைமுறைகள் இனிமேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Facebook Comments Box