4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி அளவிலான பயிர் கடன்: தமிழக அரசு பெருமிதம் தெரிவிப்பு

Daily Publish Whatsapp Channel

4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி அளவிலான பயிர் கடன்: தமிழக அரசு பெருமிதம் தெரிவிப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வழியாக விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.53 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கூட்டுறவுத் துறை, ஏழை மற்றும் சாதகமற்ற நிலைமையிலுள்ள மக்களுக்கு பலன்கள் அளிக்க உருவாக்கப்பட்டதொரு துறை ஆகும். இத்துறையின் வழியாக பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு, மக்கள் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது, மாநில வளர்ச்சிக்கும் உதவியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு கடன் வழங்குவதே கூட்டுறவு சங்கங்களின் முதன்மை பணியாகும். இதனடிப்படையில், அரசால் கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக மக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் சுமைகளால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவற்றை ரத்து செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கூட்டுறவு அமைப்புகளில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக்கடன் பெற்றவர்கள், 31.03.2021ம் தேதிக்குள் நிலுவையில் இருந்த ரூ.6,000 கோடி அளவிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி தள்ளுபடி சான்றிதழ்களுடன், அவர்களது நகைகளும் திருப்பி வழங்கப்பட்டன.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையிலிருந்த ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும், மகளிர் குழுக்களுக்கான கடன் வரம்பு ரூ.20 இலட்சத்தில் இருந்து ரூ.30 இலட்சமாக உயர்த்தப்பட்டு, 1,90,499 குழுக்களுக்கு மொத்தமாக ரூ.10,997.07 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடன் தொகையை நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாத பயிர் கடன்களாக, மொத்தம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-2022ஆம் ஆண்டில் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம், கால்நடை வளர்ப்புத் தொடர்பான பணிகளுக்காக 11,88,440 விவசாயிகளுக்கு ரூ.6,372.02 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 5% வட்டியில், 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் தனியாகிவிட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களைச் சுயாதீனமாக மாற்றும் நோக்கத்தில், 47,221 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தமாக ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதியை ஊக்குவிக்கும் வகையில், 16,578 பணியாற்றும் பெண்களுக்கு ரூ.470.01 கோடி, மேலும் 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடி கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான கடன்கள்:
நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில், இதுவரை 4,494 கலைஞர்களுக்கு மொத்தமாக ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம்:
பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ், ரூ.52.34 கோடி கடனுடன் 86 சுத்தம் செய்யும் வாகனங்கள் கொள்முதல் செய்து, 6.12.2024 அன்று வழங்கப்பட்டன.

வேளாண் உட்கட்டமைப்புக் திட்டங்கள்:
நாபார்டு நிதியில் இருந்து ரூ.565.42 கோடி மதிப்பில் 5,420 திட்டங்கள் 2,841 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களால் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் பல்வேறு சேவைகள் வழங்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

Coop இ-வாடகை செயலி மூலம் பயனடையும் விவசாயிகள்:
வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்து, சுமார் 2 இலட்சம் விவசாயிகள் இப்பணியில் பயனடைந்துள்ளனர்.

தானிய ஈட்டுக் கடன் மற்றும் நகைக்கடன்:
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், ரூ.392.52 கோடி அளவுக்கு தானிய ஈட்டுக் கடன்களையும், ரூ.2,089.90 கோடி நகைக்கடன்களையும் வழங்கியுள்ளன. மேலும், இச்சங்கங்கள் ரூ.10,283.21 கோடி மதிப்பிலான வணிகப் பணிகளையும் செய்துள்ளன.

கூட்டுறவு கல்வி நிறுவனங்கள்:
பர்கூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2021-22, 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.38.50 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர் தொகுதியில் 2022ல் தொடங்கப்பட்ட புதிய கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது 1,100 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகள் மற்றும் பணியிடங்கள்:
2022ல் 6,729 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்; 2023ல் 2,403 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2024ல் 3,353 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

மருந்தகங்கள் தொடக்கம்:
2021ல் 70 மாதிரி மருந்தகங்கள் தொடக்கப்பட்டு, ரூ.39.87 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டன.

விருதுகள்:
WDRA மற்றும் தேசிய இணையம் ஆகியன தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிடங்குகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளன.

Facebook Comments Box