திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபரின் புகைப்படம், வீடியோ வெளியீடு செய்த போலீஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் போலீசார் இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், சந்தேக நபரை அடையாளம் காணக்கூடிய யாரேனும் இருந்தால், 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 12ம் தேதி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை, ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்து, தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றதாக புகார் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறியதைத் தொடர்ந்து, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சிறுமி உடல்நிலை சீராக, நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தலைமையில், 3 டிஎஸ்பிக்கள் உட்பட 8 தனிப்படைகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள துணிகர குற்றவாளியை பிடிக்க, தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, தற்போது சந்தேக நபரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் உதவிக்கரமாக தகவல்கள் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.