பழனிசாமி பேச்சில் மறைநோக்கம் இல்லை: நயினார் நாகேந்திரன் விளக்கம்
“ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல” என்ற பழனிசாமியின் கருத்தில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் வெட்டாறு நதிக்குக் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பூதங்குடி பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பாஜக சார்பில் வாஞ்சூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பூதங்குடியில் கட்ட திட்டமிட்ட தடுப்பணையை, பயனில்லை என்றே அறிந்திருக்கின்ற உத்தம சோழபுரத்தில் கட்ட திட்டமிடுவதே தவறு. இது மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யாது. 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பூதங்குடியிலேயே தடுப்பணை கட்டப்படும். மத்திய அரசு வழங்கும் விவசாய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை,” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், பாஜகவால் அதிமுக கபளீகரம் செய்யப்படும் என்றும் திமுகவினர் கூறி வருகிறார்கள். அந்தக் கருத்துகளுக்கே பதிலளிக்கவே பழனிசாமி அந்த வகையில் பேசியுள்ளார். அதில் எந்த திட்டவட்டமான உள்நோக்கமும் இல்லை.
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எந்தக் கட்சி எவ்வளவு இடங்களை வெல்லும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும், எத்தனை இடங்களில் வெல்லும் என்ற கேள்வி மீது ஊடகங்கள் அதிகமாக கவலைப்பட தேவையில்லை,” என்று தெரிவித்தார்.