பஞ்சாலை தொழிற்சங்க சொத்துகள் எந்தக் கட்சிக்கும் கட்டுப்பாட்டுக்குள் வர முடியாது – வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி பதிலடி
தொழிற்சங்க சொத்து விவகாரம் தொடர்பாக வைகோ அறியாமையுடன் கருத்து தெரிவித்துள்ளார் எனவும், பஞ்சாலை தொழிலாளர் சங்க சொத்துகள் எந்த அரசியற் கட்சியின் கட்டுப்பாடிலும் இருக்க முடியாது எனவும் மதிமுக முன்னாள் அவைத்தலைவரும், தற்போது விரிவாக கருத்து தெரிவித்துள்ள திருப்பூர் சு. துரைசாமி கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் அவர் கூறியதாவது:
“வைகோவை கடுமையான சூழ்நிலையில் இருந்தபோது துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் திமுகவிலிருந்து விலகினேன். ஆனால் இன்று அவர், ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகளை நான் அபகரித்ததாகக் கூறுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தின் பெயரிலாக வாங்கப்பட்ட சொத்துகள், அந்தத் தொழிற்சங்கத்துக்கே சொந்தமானவை. தனிநபர்கள் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. மேலும், இந்த சொத்துகள் தொடர்பான கட்சிப் பணிகள் குறித்து, பொருளாளர் மாசிலாமணி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் காசோலையில் கையெழுத்து இட்டதாக ஆதாரம் இல்லை.
கட்சியின் நிதி நடவடிக்கைகளை நிர்வகிக்க வேண்டியது பொருளாளரின் கடமை என்ற சட்ட விதி இருக்கிறது. ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக பொருளாளர் கையெழுத்திட வேண்டிய இடங்களில் பொதுச்செயலாளராக இருந்த வைகோ தான் கையெழுத்திட்டு கட்சித் திட்டங்களுக்கு பணத்தை செலவிட்டுள்ளார். இதுபற்றிய எந்த விளக்கத்தையும் அவர் இதுவரை அளிக்கவில்லை.
இந்த சொத்துகள் அனைத்தும் தொழிற்சங்கத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும் அதனை கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது. தாங்களே புரிந்துகொள்ளாமல் பேசுகிற வைகோ, அவரது பேச்சுகளால் இளைஞர்களை தவறான பாதையில் இழுத்துச் செல்கிறார்.
இப்போதெல்லாம் திமுகவை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார் என்றால், தனிக் கட்சி வைத்திருக்க வேண்டியது ஏன்? நேராக திமுகவுடன் மதிமுகவையும் இணைத்து விட வேண்டியதுதானே?” என்றார்.