தென் மாவட்ட நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஜூலை 25-ல் கலந்தாலோசனை

தென் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதியின் அமமுக நிர்வாகிகளுடன், வரவிருக்கும் ஜூலை 25-ம் தேதியில் தொடங்கி, பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் சமயத்தை கணித்தே, தென் மாவட்டங்களைத் தொகுதிவாரியாக பிரித்து, அங்கு உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் நடவடிக்கையை தினகரன் முன்னெடுத்து வருகிறார்.

இது குறித்து அமமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியில் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள ‘ராஜ் மஹால்’ மண்டபத்தில், டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜூலை 26-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டையிலுள்ள ஜிகேஎம் பேலஸில் நிர்வாகிகள் கலந்தாலோசிக்கிறார்கள்.

அதேபோல், ஜூலை 28-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சுப்புலட்சுமி திருமண மஹாலில், மற்றும் ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் திருவானைக்காவல் சாலையிலுள்ள ஏஜி திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.

Facebook Comments Box