முதல்வர் நலமுடன் உள்ளார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

முதல்வர் நலமுடன் உள்ளார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நலமாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருந்த முதல்வர், பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுமார் இரண்டரை மணி நேரம் பரிசோதனைகள் நடைபெற்றபின், அவர் மீண்டும் கிரீம்ஸ் சாலை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், முதல்வர் ஸ்டாலின் தனது அலுவலக செயல்பாடுகளை வழக்கம்போல் கவனித்தார். குறிப்பாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதுபடி, முதல்வர் தலைமைச் செயலர் நா.முருகானந்தத்துடன் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், கடந்த ஜூலை 21 வரை 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றும், அவற்றின் நிலை, நடவடிக்கைகள் பற்றியும் சீராக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும், மனுக்களுக்கு தக்க நேரத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டும், முகாம்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“முதல்வர் நலமுடன் உள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவருக்கு மூன்று நாள் ஓய்வு பரிந்துரைத்துள்ளனர். விரைவில் முழுமையாக குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்புவார்” என்றார்.

Facebook Comments Box