குரூப்-4 தேர்வு ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வில் ஏற்பட்ட பெரும் குழப்பங்களை முன்னிறுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
புதிய சர்ச்சைகளுக்கு உரியதாக ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அமைந்துள்ளது. இந்த தேர்வுக்கு முன்பே, மதுரையில் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் சீல் இல்லாத நிலையிலும், கதவின் மேல் ஏ4 காகிதம் ஒட்டப்பட்ட நிலையில் வினாத்தாள் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், தேர்வு நடைபெற்ற பின்பும் தமிழ்ப் பாடக்கேள்விகள் உள்ளிட்ட சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
தற்போது, சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரூப்-4 பதவிகள், குறிப்பாக விஏஒ பணியிடங்கள், தமிழக அரசின் அடையாளம் போன்றவை. சாதி, மத பேதமின்றி பின்தங்கிய சமூகங்களை உயர்வுக்கு கொண்டு வருவதற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய பதவிகளாக இது அறியப்படுகிறது.
இத்தகைய தேர்வுகள் மிகுந்த கவனத்துடனும், தூய்மையுடனும் நடத்தப்பட வேண்டியவை. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான அரசு, மெத்தனமாகவும் பொறுப்பற்ற முறையிலும் நடத்தி, தேர்வர்கள் எதிர்பார்த்த நீதியையும் நம்பிக்கையையும் பறித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எனவே,
- ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
- உடனடியாக புதிய தேதியில் மறுதேர்வு அறிவிக்கப்பட வேண்டும்.
- தேர்வுக்குள் ஏற்பட்டுள்ள அனைத்து குளறுபடிகளும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும்.
- குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.