மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்திலிருந்து இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டது – உயர்நீதிமன்றத்தில் வனிதா விளக்கம்

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்திலிருந்து இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டது – உயர்நீதிமன்றத்தில் வனிதா விளக்கம்

நடிகை வனிதா விஜயகுமார் நடித்து வெளியான ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில், இசை அமைப்பாளர் இளையராஜாவின் பெயர் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவான ‘மிஸஸ் & மிஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கிய மைக்கேல் மதன காமராஜன் படத்தின் “ராத்திரி சிவராத்திரி…” என்ற பாடல் இடம்பெற்றது.

இந்த பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதோடு, இசையை மாற்றியமைத்ததாகவும் குற்றம் சாட்டி, இளையராஜா தரப்பில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இது காப்புரிமை சட்டம் மீறிய செயல் என்றும், உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், இளையராஜா இசையமைத்த பாடலுடன் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. தயாரிப்பாளர் வனிதா விஜயகுமாரின் சார்பில், எக்கோ நிறுவனத்திடம் உரிமம் பெற்று பாடலை பயன்படுத்தியதாகவும், எனவே காப்புரிமை மீறப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் பதிலளிக்க வனிதாவிற்கு முன்பு அவகாசம் வழங்கப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவின் வழக்கறிஞர் ஏ. சரவணன், படத்தில் அவர் பெயர் இடம்பெறக்கூடாது எனத் தடையிட வேண்டுமென கேட்டார்.

வனிதாவின் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர், இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அவர்கள் மூலம் தான் உரிமம் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜாவின் பெயர் தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் பதிலாளராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box