எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப திருத்தத்துக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது – மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க நாளை (ஜூலை 23) மாலை 5 மணி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளேன். என் ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 15 அன்று வெளியான அறிவிப்பில் எனது விண்ணப்பம் உட்பட 1800 விண்ணப்பங்களில் பிழைகள் உள்ளதாகக் கூறி அவற்றை நிராகரித்துள்ளனர்.
இந்த பிழைகளை சரி செய்து திருத்த வேண்டிய கால அவகாசம் ஜூலை 18ஆம் தேதியுடன் முடிவடைந்து, அதற்கான இணையதள வாயில் மூடப்பட்டது. எனவே, மேலும் திருத்தம் செய்ய தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி. குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் எம். வேல்முருகன், இந்த நிலைமையால் 1800 மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்றார்.
இதற்கு பதிலளித்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் வழக்கறிஞர், மாணவர்கள் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து உத்தரவு பிறப்பித்தார்.