அஜித்குமார் கொலை வழக்கு: மருத்துவ பணியாளர்கள் மீது சிபிஐ தீவிர விசாரணை
மடப்புரம் கோயிலில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அரசு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர்கள் என மொத்தம் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் விரிவாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில், ஜூன் 27ஆம் தேதி நிகிதா என்ற பெண் தரிசனம் செய்ய வந்த போது, அவரது நகை காணாமல் போனது தொடர்பான புகாரில், அந்தக் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இதற்காக தனிப்படை போலீசார் அவரை அழைத்துச் சென்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம், திருப்புவனம் காவல் நிலையம் மற்றும் கோயிலில் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அஜித்குமாரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் அதிகாரியின் சாரதி கார்த்திக்வேல், நண்பர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், அவரது தம்பி நவீன்குமார் மற்றும் தனிப்படை வாகன ஓட்டுநரான போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் சிபிஐ அலுவலகம், மதுரை ஆத்திகுளம் சாலையில் கடந்த 18ம் தேதி நேரில் ஆஜராக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
மேலும், கோயில் ஊழியர் பிரவீன்குமார், நண்பர்கள் வினோத்குமார், அருண்குமார், நவீன்குமார் ஆகிய நான்கு பேரும் மீண்டும் இரண்டாவது முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி, ஒரு நாள் முழுவதும் (காலை முதல் இரவு வரை) சில முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை எதிர்கொண்டனர்.
அஜித்குமார் தாக்கப்பட்ட நிலையில், ஜூன் 28 ஆம் தேதி மாலை, அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, மருத்துவ உதவியாளர்கள் அழகர், அமுதா, ஒரு தனியார் மருத்துவர் மற்றும் கோயில் நிர்வாகி கண்ணன், கார்த்திக் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணைக்கு வர அழைத்தது.
இக்கோரிக்கையின்பேரில் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை சிபிஐ அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் கேள்வி-பதில்களுடன் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது வழங்கப்பட்ட பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதாகவும், மீண்டும் அழைக்கப்படும்போது ஆஜராக வேண்டும் என எழுத்து பெற்றுவிட்டு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.