“மாஞ்சோலையில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக அகற்ற அரசு முயல்கிறது” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் மக்களை கட்டாயமாக வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த மாஞ்சோலை தொழிலாளர்களின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமி, ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“திருநெல்வேலியில் நில உரிமையும், மனித உரிமைக்கும் ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது தாமிரபரணியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க நதிக்கரையில் இடம் கேட்டுள்ளோம். நாங்கள் தனிநிதியில் அந்த நினைவகத்தை கட்டத் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை.
2028 ஆம் ஆண்டு வரை மாஞ்சோலை மக்களை அகற்றக்கூடாது என இருந்த நிலையிலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மறுத்து அவர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்ய அரசு முயற்சிக்கிறது. இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, அது தற்போது விசாரணை நிலையில் உள்ளது.
மாஞ்சோலை குடிமக்களுக்கு 2006ஆம் ஆண்டு அமலுக்கு வந்த வன உரிமைச் சட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் 1.73 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வன நிலங்கள் வேறு பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் வன உரிமைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தற்போதைய முதலமைச்சர் அதை நசுக்க முயற்சிக்கிறார். இது வரலாற்றில் அவருக்கு மோசமான மதிப்பீட்டை ஏற்படுத்தும். வரலாறு இதை ஒருபோதும் மன்னிக்காது. மாஞ்சோலையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய ஆட்சி அமையவே முடியாத நிலையை நாங்கள் உருவாக்குவோம்” என கிருஷ்ணசாமி கூறினார்.