“தேஜக கூட்டணியிலேயே தொடர்கிறது அமமுக” – தினகரன் உறுதி

“தேஜக கூட்டணியிலேயே தொடர்கிறது அமமுக” – தினகரன் உறுதி

“தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும் போது, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்பார்கள்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“திமுகவை தோற்கடிப்பதே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் நோக்கம். அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பலமுறை முழுமையான விளக்கங்களை அளித்துவிட்டேன். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நிலைத்திருக்கின்றோம்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் உள்ள கட்சிகளை பட்டியலிடும் போது, அமமுக பெயரை சொல்லாமல் விடுவதைப் பற்றி அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, அந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும். முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதைக் குறித்து அமித் ஷாவிடம்தான் கேட்க வேண்டும்.

மக்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளனர் என்பதை உணர்ந்துதான் அவர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்துள்ளார். எங்கள் கூட்டணியின் வளர்ச்சியை நோக்கி திமுக கடும் பதற்றத்தில் இருக்கிறது.

திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கூலிப்படை கலாச்சாரம் பரவலாகியுள்ளது. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். தமிழகத்தில் 210 தொகுதிகளில் திமுக தோல்வியடையும் நிலை உருவாகியுள்ளது.

அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் சேர்ந்திருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார் தினகரன்.

Facebook Comments Box