பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் மீண்டும் பரவல் – கிராமங்களில் பதற்ற நிலை

ஏகனாபுரத்தை மையமாகக் கொண்டு நடந்து வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம், தற்போது வளத்தோட்டம் பகுதிக்குச் சென்றடைந்து, மக்களின் எதிர்ப்புப் பெரிதும் அதிகரித்துள்ளது. நேற்று அந்த பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, “விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்” என கூச்செழுப்பினர்.

பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த திட்டத்திற்காக 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் ஏகனாபுரம், வளத்தோட்டம், உள்ளிட்ட பல கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்படவுள்ளன. விவசாய நிலங்கள், குடியிருப்புகள், ஏரிகள், குளங்கள் என மக்களின் வாழ்வாதாரத் தளங்கள் நேரடியாக தாக்கம் பெறுகின்றன.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு மேம்பாட்டு கழகம் (SIPCOT) இந்த விமான நிலையத்திற்கான நிலங்களை அடையாளம் காணும் பணியையும், கையகப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வரை 19 பேர் தங்களுடைய நிலங்களை கொடுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து, மக்கள் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகியுள்ளது.

ஏகனாபுரம் மக்கள், “எங்கள் எதிர்ப்புக்கு மதிப்பு தரப்படவில்லை” எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. சட்ட வழிகளில் உரிமை பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரிவடையும் எதிர்ப்பு

ஏகனாபுரத்தில் தொடரும் போராட்டம் தற்போது 1,095-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வளத்தோட்டம் மக்கள் போராட்டத்தில் இணைந்து, 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விமான நிலையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஏகனாபுரம் மக்கள், எதிர்ப்பு குழுவினர், மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுமக்கள் தெரிவித்ததில்,

“இந்த நிலமே எங்கள் வாழ்வாதாரம். எங்களை இங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற முடியாது. எங்கள் உரிமைக்காக உயிரை கொடுத்தாவது நாங்கள் போராடுவோம்,” என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக, பரந்தூர், ஏகனாபுரம், வளத்தோட்டம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் பதற்றநிலை நிலவுகிறது.

Facebook Comments Box