முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றலுக்குக் காரணமான சீரற்ற இதயத் துடிப்புக்கான சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார், மேலும் வரும்இரண்டு நாட்களுக்குள் வழக்கமான பணிகளை தொடங்குவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை தனது தினசரி நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ள தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்றுவிட்டு திரும்பினார்.
மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் அரசு வேலைகளை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 24) காலையில் அவருக்கு மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதைப் பற்றிய அறிக்கையில், அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி. அனில் தெரிவித்ததாவது:
“முதல்வருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் சீரற்ற இதயத்துடிப்பால் ஏற்பட்டதென்று பரிசோதனையில் தெரியவந்தது. இதயத் துறை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில், இதயத் துடிப்பை சீரமைக்கும் சிகிச்சை ஜூலை 24 காலை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மேற்கொண்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எந்தவிதமான கூடுதல் சிக்கல்களும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. முதல்வர் நல்ல உடல் நிலையில் உள்ளார். இரண்டு நாட்களில் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, “முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரம் குறித்து மருத்துவர்கள் அறிவிப்பார்கள்” என்றார்.