அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ நான் ஒருபோதும் தயார் அல்ல’ – வைகோ மாநிலங்களவையில் விடைபெறும் உரை

‘அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ நான் ஒருபோதும் தயார் அல்ல’ – வைகோ மாநிலங்களவையில் விடைபெறு உரை

“மனித வாழ்க்கையில் தோல்வி, ஏமாற்றம், துரோகங்களை நாம் சந்திக்க வேண்டிய சூழல் இருக்கலாம். ஆனால், அதற்காக மனம் பதற்றத்துடன் இருக்கத் தேவையில்லை. அடிபணியவோ, சமரசம் செய்யவோ நான் ஒருபோதும் தயார் இல்லை; தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்தத் தயார்” என மாநிலங்களவையில் உரையாற்றியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது பணிக்கால முடிவை அறிவித்தார்.

2025 ஜூலை 24ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை அமர்வின் பின் நிகழ்வாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட பிரியாவிடை உரையில் கூறியது:

இந்த மகத்தான மேலவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில், இங்கு இருக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது எப்போதும் அன்பையும் மரியாதையையும் காட்டிய முன்னாள் அவைத்தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்வும் வேண்டுகிறேன்.

1978, 1984 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்த மேலவைக்கு என்னை தேர்ந்தெடுத்த தலைவர் கருணாநிதிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2019ஆம் ஆண்டு இந்த மேலவைக்கு என்னை மீண்டும் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

திமுகவின் முன்னாள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருந்த முரசொலி மாறனின் அரசியல் வழியில் பயணித்தவன் நானாகும். எனது முனைப்பால் அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் என்பதைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

ஈழத் தமிழர்களின் கொடுமைகள் மற்றும் இனப்படுகொலை குறித்தும், 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானங்களை மாநிலங்களவையில் எழுப்பியதையும், அதனைத் தொடர்ந்து 19 மாதங்கள் ‘பொடா’ சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த ஒரே எம்.பி. நானாக இருந்ததையும் நினைவுபடுத்துகிறேன். மேலும் ‘மிசா’ சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்த அனுபவமும் உண்டு. மொத்தமாக 5.5 ஆண்டுகள் சிறைவாசம் மேற்கொண்டுள்ளேன்.

பொடா சட்டத்தின் கீழ் நான் அனுபவித்தது பற்றிய உணர்வுகளை ‘சிறையில் விரிந்த மடல்கள்’ எனும் நூலில் பதிவு செய்தேன். இந்நூலை 2004 செப்டம்பர் 3ஆம் தேதி, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் வெளியிட்டார்.

இந்த அவையின் பெருமைக்குரிய உறுப்பினர்களிடையே இருந்த நெருக்கம் மறக்க முடியாதது. கார்கே, சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி, டெரெக் ஓ’பிரையன், ஜெயா பச்சன், திருச்சி சிவா, ஜான் பிரிட்டாஸ், மனோஜ் குமார் ஜா உள்ளிட்ட பலரின் உரைகள் மனதில் நிறைந்து இருக்கின்றன.

மம்தா பானர்ஜி ஒருநாள் என்னிடம் வந்து என் கருப்பு சால்வையை கேட்டுக்கொண்டு, “இன்று எனக்கு இது உந்துசக்தி தரும்” என்று கூறியது என் மனதில் நீங்காத ஞாபகமாக உள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது என்.எல்.சி நிறுவனத்தை தனியார்மயமாக்கக்கூடாது என நேரில் கேட்டுக்கொண்டேன். அவர் என் கோரிக்கையை ஏற்று, அந்த முடிவை திரும்பப் பெற உத்தரவிட்டது எனக்கு ஓர் பெருமை.

அண்ணா 1963ல் அறிவித்த இருமொழிக் கொள்கையை இன்று பல மாநிலங்கள் பின்பற்றுவது பெருமையான விடயம்.

கவிஞர் லாங்ஃபெல்லோவின் வரிகள் இளைஞர்களுக்கான உந்துதலாக இருக்கும். “உயர்வுகளுக்கு காரணம் திடீர் அருள் அல்ல; மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் அவர்கள் உழைத்தவர்கள்” என்பது அவருடைய கருத்து.

இப்பெருமைமிக்க சபையில், ‘நான் அடிபணியவோ, சமரசம் செய்யவோ மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்ற உறுதியுடன் நான் விடைபெறுகிறேன்” எனக் கூறினார்.

Facebook Comments Box