முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (வியாழன்) ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதாரணமாக இருப்பதாகவும், அவர் இரண்டு நாட்களுக்குள் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையிலிருந்தபடியே மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், அவர் இன்னும் 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்பவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இன்று, மருத்துவமனையில் இருக்கிற முதலவரை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து நலத்தை கேள்வியிட்டார்.

முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட மயக்கம் தொடர்பான மருத்துவ சோதனைகள் க்ரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டன. இதில், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களால் தலைசுற்றல் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.

இதய மருத்துவ நிபுணர் டாக்டர் G. செங்குட்டுவேலுவின் தலைமையிலான மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில், தேவையான சிகிச்சைமுறை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. இன்று நடந்த ஆஞ்சியோகிராம் சோதனையின் முடிவும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார்; மேலும் இரண்டு நாட்களில் தனது நடைமுறைச் செயல்களை தொடங்குவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box