ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட ரூ.3.24 கோடி பண வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர்கள் இருவரையும், கட்சியிலிருந்து நீக்குவதற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில், கடந்த ஜூன் 13-ம் தேதி ஒரு நகைக்கடையின் உரிமையாளரிடம் இருந்து ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து, இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

இக்கேஸில் நடத்தப்பட்ட விசாரணையில், திருவாரூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரை அரசு மற்றும் நகர பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, துரை அரசு போலீசில் சரணடைந்தார்; ஸ்ரீராம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரள போலீசால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கட்சி பெயருக்கு கேடு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, இருவரையும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட நீக்கி, அவர்கள் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments Box