நெம்மேலி மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி உண்ணாவிரதம்
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி மீனவர் பகுதியில் கடலின் அரிப்பு தொடர்ந்து ஏற்படுவதால், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டும் வேலைகள் தொடங்கப்படாத சூழ்நிலையில், அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி 100-க்கும் அதிகமான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி பகுதியில், கடல் நீரை குடிநீராக மாற்றும் இயந்திரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக கடலின் அரிப்பு தொடர்ந்து உருவாகி வருவதால், அப்பகுதியில் வாழும் மீனவர்களின் குடியிருப்புகள் கடலின் நீரால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மேலும், கடல் அரிப்பால் கரை சேதமடைந்ததால், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், நெம்மேலி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனக் கோரி மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மீன்வளத் துறை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தில், ரூ.25 கோடி செலவில் தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் மையம் அமைக்கப்படும் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதற்கான பணி தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில்தான், நெம்மேலி பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள், இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், நெம்மேலி செல்லும் சாலையில் கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை ஏந்தி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஜனார்தணன் ஆகியோர் நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மீனவர்கள் போராட்டத்தை நிறுத்தி கலைந்தனர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.