“தாயகத்தை அபார மன உறுதியுடன் பாதுகாத்தவர்” – கார்கில் வெற்றி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
கார்கில் போர் வெற்றியின் 26-வது ஆண்டு நினைவையொட்டி, போரில் உயிர் கொடுத்து வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அஞ்சலியை செலுத்தினார்.
1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் எதிராக நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா சாதித்த வெற்றியை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று ‘கார்கில் விஜய் திவாஸ்’ எனும் பெயரில் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. போரில் உயிர் அர்ப்பணித்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், உயிருடன் இருக்கும் வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் நோக்கில் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் அனுபவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், “தாயகத்தை அளவில்லாத மன உறுதியுடன் பாதுகாத்து, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கார்கில் வெற்றி நாளில் எனது வீரவணக்கங்கள்! அவர்களது துணிச்சலும், தியாகமும் எப்போதும் நம் நினைவில் நிலைத்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முந்தையதாக, கார்கில் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கார்கில் வெற்றி தினத்தன்று, என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் இந்திய மக்களுக்கு. தாய்நாட்டின் மானத்தைக் காக்க தனது உயிரை அர்ப்பணித்த இந்திய வீரர்களின் அபார வீரமும், தைரியமும் இந்நாளில் நாம் நினைவு கூர்கிறோம். அவர்களது தியாக உணர்வு, எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் தூண்டுதலாக இருக்கும். ஜெய்ஹிந்த்!” என கூறியுள்ளார்.