தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் – ₹4,874 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் – ₹4,874 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்

தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதையடுத்து, ₹4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வை நிகழ்த்தினார்.

₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில், 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேர விமான இயக்கத்திற்கான வசதிகளும், ஒரே நேரத்தில் ஐந்து ஏ-321 வகை விமானங்களை நிறுத்தக்கூடிய வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய பயணிகள் முனையம் 17,340 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளதுடன், அதில் 43 மீட்டர் உயரமுடைய கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு நிலையம், 3 ஏரோபிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு விரிவான உணவகம், சிற்றுண்டிக் கடைகள், மருந்தகம், ஸ்பா மையம், பாலூட்டும் அறை, மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்புதிய முனையத்தில் பயணிகள் நுழையும் 4 கதவுகள், வெளியேறும் 4 வாயில்கள், 21 செக்-இன் கவுன்டர்களுடன், ஒவ்வொரு மணித்தியாளத்திலும் 1,440 பயணிகளை கையாளக்கூடிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு கட்டிடக்கலை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் பசுமை கட்டிடங்களுக்கான 4 நட்சத்திர தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது.

திறப்பு விழா நடைபெறும் முன், பிரதமர் மோடி இந்திய விமானப்படையினுடைய சிறப்பு விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

புதிய பயணிகள் முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர், அங்கு உள்ள அடிப்படை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொது விழாவில் ₹4,874 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாடுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவின் போது, தூத்துக்குடி வஊசி துறைமுகத்தில் ₹285 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் 3-ஐ திறந்துவைத்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் NH-36 சேத்தியாதோப்பு – சோழபுரம் நான்கு வழிச்சாலை மற்றும் NH-138 தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள ஆறு வழிச்சாலை ஆகியவை ₹2,557 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் ₹1,032 கோடி மதிப்பிலான திட்டங்களில் நாகர்கோவில் – கன்யாகுமரி இரட்டைப் பாதை, ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு, திருநெல்வேலி – மேல்ப்பாளையம் இரட்டைமயமாக்குதல் மற்றும் மதுரை – போடிநாயக்கனூர் மின்மயமாக்குதல் ஆகியவை அடங்கும்.

மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 2 ஜிகாவாட் திறனுடைய சுத்தமான மற்றும் நிலையான மின்சாரம் வழங்க ₹548 கோடி செலவில் புதிய எரிசக்தி பரிமாற்ற திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், மனோஹர் லால், கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, சர்பானந்த சோனோவால், முரளிதர் மொஹோல், எல்.முருகன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி விமான நிலையம் ஐந்து அடுக்குச் பாதுகாப்பு வலையால் சுற்றப்பட்டு, சுமார் 2,000 போலீஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Facebook Comments Box