ஓரணியில் தமிழ்நாடு: அப்போலோ மருத்துவமனையில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மற்றும் எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தொணியில் மாநிலத்தின் மரபு, மொழி மற்றும் மதிப்பை பாதுகாக்கும் முயற்சியில், பெரும்பான்மையிலான மக்களை இணையச் செய்ததற்கும், இதன் வெற்றிக்கு காரணமான திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டைத் தெரிவித்தார். மேலும், 150 சட்டமன்ற தொகுதிகளில் 30 சதவீத உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிறைவேறியுள்ளதாக குறிப்பிட்டு அதற்கும் பாராட்டுச் சொன்னார்.
இதேவேளை, உறுப்பினர் சேர்க்கையில் பின்னடைவு காணப்படும் சில தொகுதிகள் மற்றும் மாவட்டங்களைப் பற்றி குறிப்பிட்டு, அவற்றை உரிய மண்டல பொறுப்பாளர்கள் கவனத்தில் எடுத்து சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். சில இடங்களில் உறுப்பினர் சேர்க்கை தரவுகளில் ஏற்பட்டுள்ள ஒழுங்கின்மைகள் குறித்து குறிப்பிடிய அவர், அந்தந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
வீடு தோறும் சென்றபோது மக்களிடமிருந்து ஏற்பட்ட வரவேற்பு, திராவிட மாதிரி ஆட்சியின் நன்மைகள் குறித்து மக்கள் கொண்ட மகிழ்ச்சி ஆகியவற்றை மண்டல பொறுப்பாளர்கள் விளக்கினார்கள்.
இதனிடையே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் திட்டம் பொதுமக்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பை பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.