பொன்னேரியில் இருந்து பிரகதீஸ்வரர் கோயில்வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ‘ரோடு ஷோ’ நடத்துகிறார் பிரதமர் மோடி
கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதையொட்டி, அவர் பொன்னேரியிலிருந்து கோயில்வரை 2 கி.மீ. தூரத்திற்கு ‘ரோடு ஷோ’ மூலம் பயணித்து பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
மோடியின் வருகையை முன்னிட்டு, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், பொன்னேரி மற்றும் அந்த இடங்களை இணைக்கும் சாலை, விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெயங்கொண்டம் முதல் மீன்சுருட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு கால்நடைகள் செல்லவும், பொன்னேரியில் மேய்ச்சலுக்காக விடவும் இன்று முழுமையான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை வரவேற்கும் விதமாக, பொன்னேரி முதல் கோயில் வரை சாலையின் இருபுறங்களிலும் பாஜக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதால், அந்தக் கட்சியின் கொடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் முதல் பிரதமராக பிரதமர் மோடி உள்ளதுதான் குறிப்பிடத்தக்க விடயம்.