திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்தார் பழனிசாமி!
ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்வதற்காக கங்கைகொண்டசோழபுரத்திற்கு செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கி வைத்த பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் திருச்சி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 10 மணிக்கு முன்னதாகவே வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் பிரதமரை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுகவின் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி. சண்முகம், எம்.பி. துரை வைகோ உள்ளிட்டர் வரவேற்றனர்.
பின்னர் பிரதமர் காரில் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் ஹோட்டலில் தங்கினார். இன்று (ஜூலை 27) காலை 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்ற اوர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு நடைபெறும் ராஜேந்திர சோழரின் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்கிறார்.
மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி திரும்பும் பிரதமர், பிற்பகல் 2.30 மணிக்கு தனியார் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி, அவரது பாதுகாப்புக்காக எஸ்பிஜி டிஐஜி விமுக்த் நிரஞ்சன் தலைமையில் அதிகாரிகள், விமான நிலையம் மற்றும் ஹோட்டலை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும், ஹோட்டலில் 6 அடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளன. மாநகரம் முழுவதும் சுமார் 1,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோடியின் வருகையையொட்டி, விமான நிலையம் அருகிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதி துணித் திரையால் மறைக்கப்பட்டிருந்தது. இது விமர்சனங்களை ஏற்படுத்த, அந்த திரைகள் நேற்று அகற்றப்பட்டன. மேலும், பிரதமர் பயணிக்கும் வழியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று மதியம் வரை மூடப்பட்டதாக போலீசார் அறிவுறுத்தினர்.
மேலும், விமான நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலக சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமருக்காக விமான நிலையத்தில் நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் எதில் பயணிப்பார் என்பது பாதுகாப்பு காரணங்களால் தெரிவிக்கப்படவில்லை.