பிஹாரில் 66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் மோசடி செயல்: ப.சிதம்பரம் கடுமையான குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.63 லட்சத்தில் உருவாக்கப்படும் டயாலிசிஸ் மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: மகாராஷ்டிராவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பிஹாரில் அதுபோன்ற செயலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், மாற்றாக அங்குள்ள வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இரு மாதங்களுக்கு முன்பே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது முறையல்ல. 66 இலட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய ஏமாற்று நடவடிக்கையாக பார்க்கவேண்டும்.
அந்த மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் பலரும் வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேர்தலுக்காக பிஹாருக்கு வரமாட்டார்களா? மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஒரு வருடத்திற்குள் 22 இலட்சம் பேர் உயிரிழந்துவிட்டார்களா? போலி வாக்குகளைத் தடுக்க பல்வேறு சட்டவழிகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை புல்டோசர் போல் அழித்து மாற்றுகிறது. அதற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறோம் என்றார்.