திமுக, பாஜகவினருக்கிடையே தள்ளுமுள்ளு – நாற்காலி வீச்சால் பரபரப்பு! பிரதமர் நிகழ்ச்சியில் குழப்பம்
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய முனையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தபோது, திமுக மற்றும் பாஜகவினர் தங்களது தலைவர்களை வாழ்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு தொடர்ந்து கோஷமிட்டனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சிலர் நாற்காலிகளை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய முனையம் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி நேற்று இரவு 7.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தார். விழா நடைபெறும் பந்தல்களில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் அமர தலா 6 ஆயிரம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணி முதலே இரு கட்சியினரும் பொதுமக்களுடன் விழா இடத்திற்கு வரத் தொடங்கினர். அந்த நேரத்திலிருந்து திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை வாழ்த்தியும், பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தியும், சத்தமிடும் கோஷங்களுடன் இருந்தனர்.
பிரதமர் மோடி 7.50 மணிக்கு மேடையில் வந்தார். 8.15 மணிக்கு உரை நிகழ்த்தத் தொடங்கினார். ஆனால் அப்போது கூட இரு கட்சியினரும் தொடர்ந்து கூச்சலிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இரு தரப்பினரும் தங்களது கட்சி நிறமுடைய துணிகளை கைகளில் சுழற்றி தலைக்கு மேல் தூக்கி காட்டி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பிரதமர் உரையை உரியவாறு கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
திடீரென இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக தள்ளியபடி தகராறு செய்தனர். அதேவேளை, சிலர் நாற்காலிகளை தூக்கி வீசினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த குழப்பம் நீடித்தது. போலீஸார் இரு தரப்பினரையும் அமைதியடையச் செய்ய முயன்றும், அவர்கள் கட்டுப்படவில்லை. இதனால், விழா தளத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்:
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுப்பதாகக் குற்றம்சாட்டி, தூத்துக்குடியில் விமான நிலையத்தை திறந்துவைக்க வந்த பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் கூடி, கருப்புக்கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்தனர்.