தமிழகத்திற்கு ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்: முதல்வர் சார்பில் பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு
தமிழகத்துக்கு எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனுவாக வழங்கினார்.
திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடியை நேற்று முன்தினம் இரவு சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
சமக்ரா சிக்ஷா நிதி வழங்கல்:
மத்திய அரசு தற்போது வரை தமிழகத்திற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் இருப்பது, பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, 2024-25 நிதியாண்டிற்கான நிலுவைத் தொகையான ரூ.2,151.59 கோடியும், 2025-26ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியும், பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனை இன்றி விரைவாக ஒதுக்க வேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரயில் திட்டங்கள்:
10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை, ஈரோடு–பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி, அத்திப்பட்டு–புத்தூர், மகாபலிபுரம் வழியாக சென்னை–கடலூர் போன்ற புதிய ரயில்வே பாதை திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய ரயில்வே பக்க அபிவிருத்தி திட்டங்கள்:
திருவனந்தபுரம்–கன்னியாகுமரி இரட்டைமாற்று பாதையை விரைவுபடுத்தவும், திருப்பத்தூர்–கிருஷ்ணகிரி–ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் வழங்கவும், கோவை–பல்லடம்–கரூர், கோவை–கோபி–பவானி–சேலம், மதுரை–மேலூர்–துவரங்குறிச்சி–விராலிமலை–இனாம்குளத்தூர் மற்றும் மதுரை சுற்றுப்புற பகுதியில் புறநகர் ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்ய நடவடிக்கை தேவை.
சென்னை புறநகர் ரயில் சேவைகள் மேம்பாடு:
உச்ச நேரங்களில் சென்னையின் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் இடைவெளியை குறைக்க வேண்டும். மேலும், ஏசி மற்றும் ஏசி இல்லாத மின்சார ரயில் பெட்டிகளை (EMU) அதிக அளவில் ஒதுக்க வேண்டும். தாம்பரம்–செங்கல்பட்டு 4-வது வழித்தடம் செயல்படுத்தப்பட வேண்டும். ஆவடி–ஸ்ரீபெரும்புதூர் ரயில்வே திட்டத்தையும் விரைவுபடுத்த வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள்:
கோவை மெட்ரோ திட்டம் (34.8 கிமீ) ரூ.10,740.49 கோடி மதிப்பீட்டில், மதுரை மெட்ரோ திட்டம் (32 கிமீ) ரூ.11,368.35 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டங்கள் 50:50 முறைபடி மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி வழங்கும் அடிப்படையில் விரைந்து செயல்படவேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பு:
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களுடைய படகுகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வுகள் தேவை.
சேலம் உருக்காலை நிலம் பயன்பாடு:
1971–1975 காலப்பகுதியில், சேலத்தில் நிறுவவென திட்டமிடப்பட்ட உருக்காலைக்காக தமிழக அரசு ஒதுக்கிய 3,973.08 ஏக்கர் நிலத்தில் 1,503.44 ஏக்கர் இன்றுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலத்தை பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலைக்கு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் பிரதமருக்கு வழங்கிய மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின், இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில், “மாணவர்களின் கல்வி நிதி, முக்கிய ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சேலத்தில் பாதுகாப்புத் தொழிற்பூங்கா தொடங்கல் ஆகியவை தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம். மாநில மக்களின் நலனையும், வளர்ச்சியையும் கவனித்து, பிரதமர் உரிய முடிவுகளை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.